
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், 82 வயதான ஓம்பிரகாஷ் சவுதாலா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
திறந்தவௌி பள்ளிப்படிப்புகளுக்கான தேசிய கல்வி நிறுவனம் நடத்திய தேர்வில் 12-ம் வகுப்பை சவுதாலா பாஸ் செய்துள்ளார்.
இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. 2000ம் ஆண்டு இவரின் ஆட்சியின் போது, ஆசிரியர்களை பணி அமர்த்துதலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தற்போது டெல்லி திகார் சிறையில் சவுதாலா இருந்து வருகிறார்.
பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத 82 வயதான சவுதாலா, இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து இந்தியன் தேசிய லோக் தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வும், சவுதலாவின் மகனுமான அபய் சவுதாலா கூறுகையில், “ எனது தந்தை 12-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த வாரம் வந்த தேர்வு முடிவுகளில் அவர் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
என் தந்தை பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, எனது தாத்தாவும், முன்னாள் துணை பிரதமருமான தேவிலால் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார். குடும்பத்தில் மூத்தவரான எனது தந்தை பொறுப்புக்களை கவனிக்கும் வகையில், படிப்பை நிறுத்திவிட்டார். ஆனால், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை படிக்கத் தூண்டினார்.
இப்போது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், அடுத்ததாக இளநிலை பட்டப்படிப்பு படிக்கவும் எனது தந்தை முடிவு செய்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.