
குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள படேல் இனத்தவரை ”ஓபிசி” பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய இளைஞர் ஹர்திக் படேல்.
இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் பனகர் என்ற இடத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று காரில் சென்று கொண்டிருந்தார் ஹர்திக் படேல். ரானிடால் என்ற பகுதியை கடக்கும்போது, மர்ம நபர்கள் சிலர் ஹர்திக்கின் கார் மீது முட்டை மற்றும் காலணிகளை வீசினர்.
ஹர்திக் சென்ற அதே காரில் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் யாதவும் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய் யாதவ், ரானிடால் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தின் அருகே சென்றபோது பைக்கில் வந்த நபர்கள், காரின் மீது முட்டையையும் காலணிகளையும் வீசிச்சென்றதாக கூறினார். அவர்களில் சிலர் துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும் சஞ்சய் கூறினார்.
இந்த சம்பவத்துக்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள்தான் காரணம் என ஹர்திக் படேல் குற்றம் சாட்டினார். மேலும் முட்டையை வீசி எனக்கு முட்டுக்கட்டை போட முடியாது. எனது போராட்டம் தொடரும் என ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.