இன்று முதல் தங்க நகைகளில் இது கட்டாயம்.... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2021, 11:40 AM IST
Highlights

முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் ஆபரண தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். எனவே ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமென மத்திய அரசு இன்று முதல் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்துவது என 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்க நகை விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா சூழல் காரணமாக இந்த முறையை அமல்படுத்த ஜூன் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, முதற்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களுக்கு இன்று முதல் புதிய விதியை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. 

click me!