
புனித பயணம் மேற்கொள்வோருக்கான தேர்வு மும்பையில் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் தங்கள் விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழுவிற்கு ஏற்கனவே அனுப்பியுள்ளனர்.
அதன்படி இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான தேர்வு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து குவிந்துள்ள விண்ணப்பங்களில் தகுதியுள்ள யாத்ரீகர்கள் இங்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கான தேர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு தமிழகத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக 20 குழந்தைகள் உள்பட 13,584 பயணிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து ஹஜ் பயணிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வும் மும்பையில் நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுவோர் பட்டியலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு விரைவில் வெளியிடவுள்ளது.