
குழந்தைகளை கடத்துகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்தார்.
மேற்கு வங்காளத்தில்
நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்காள மாநிலத்தில் அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த மாநிலம் குழந்தைகள் கடத்தல் மையமாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அப்போது அவையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியதாவது-
மருத்துவமனை மீது
‘‘குழந்தைகளை கடத்துவதாக வரும் புகார்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் குறித்து கண்டறியப்பட்டதும் எங்கள் துறையின் மூலம் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தைகள் சரிவர பராமரிக்கப்படுகிறார்களா? என்பது குறித்து அது தொடர்பான மத்திய ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பிச்சை எடுக்க..
குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனி திட்டம் ஒன்று அடுத்த மாதம் செயல்படுத்தப்படும். இது குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.
போலீஸ், மாநில அரசு மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் அந்த திட்டம் குறித்து இறுதி செய்யப்படும். குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பதற்காக, 700க்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4 லட்சம் அழைப்புகள்
குழந்தைகள் பலாத்கார தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு மாதம்தோறும் 4 லட்சம் டெலிபோன் அழைப்புகள் வருகின்றன. அது போன்ற புகார்கள் வந்த சில மணி நேரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதரவற்றோர் பாதுகாப்பு மையங்களை கண்காணிப்பதற்கும் கடுமையான விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இதன் மூலம் அந்த மையங்களில் உள்ள குழந்தைகள் தவறான செயலில் ஈடுபடுத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
இருப்பினும் அது போன்ற மையங்களை நாள்தோறும் 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும்’’.
இவ்வாறு அவர் கூறினார்.