
புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்களால் “ரோசா” எனப்படும் நோன்பு கடைபிடித்தல் என்பது “தொற்று நோய் அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்” என்று குஜராத் மாநில 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதால், கடும் எதிர்ப்பும், சர்ச்சையும் உண்டாகியுள்ளது.
உருது வார்த்தையில் “ரோசா” எனப்படுவது புனித ரம்ஜான் மாதத்தில் இருக்கும் நோன்பாகும்.
குஜராத் மாநில அரசு வழங்கிய 4-ம் வகுப்பு இந்தி பாடத்தில் முஸ்லிம்கள் புனித ரம்ஜான் காலத்தில் வைக்கும் “ரோசா” எனப்படும் நோன்புக்கு, தொற்றுநோய் என்றும் அதனால், வயிற்றுப்போக்கு உண்டாகும் என விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய எழுத்தாளர் பிரேம்சந்த் கதையான “இத்கா”வில் வரும் ரோசா என்ற வார்த்தைக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து அறிந்து மாநில பாடப்புத்தக வாரியத்தின் தலைவர் நிதின் பெத்தானியின் பார்வைக்கு கல்வி ஆர்வலர்களும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டு சென்றனர். உடனடியாக அந்த பாடத்தில் இருந்து இந்த வார்த்தையை நீக்க வேண்டும், அது குறிப்பிட்ட மதத்தின் மக்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது என்றும் வலியுறுத்தினர். அதற்கு அது அச்சிடும்போது ஏற்பட்ட பிழையாக இருக்கும், அதே புத்தகத்தின் ஆன்-லைன் பதிப்பில் அந்த தவறு இல்லை என்று பெத்தானி விளக்கம் அளித்தார்.
இது குறித்து கல்வியாளர் முஜாஹித் நபீஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வந்துள்ள தவறு ஏதேச்சேயாக நடந்தது போன்று தெரியவில்லை. திட்டமிட்டு அந்த தவறை செய்து, மத உணர்வுகளை புண்படுத்துகிறார்கள். இதற்கு முன், ஏசு பிரானை இதுபோல் ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் அவமதிப்புசெய்தனர். பின்னர் அதை நாங்கள் குறிப்பிட்டுக் கூறி பிரச்சினை செய்ததும் அது திருத்தப்பட்டது.
2015-ம் ஆண்டு இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, இந்த தவறு இல்லை. நடப்பு புத்தக பதிப்பில் தான் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. 15 புத்தகங்கள் வெளிவந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த புத்தகத்தை திரும்பப் பெறவும், அச்சுப்பிழையை மாற்றவும் கல்வித்துறை செயலாளருக்கும், மாநில கல்வித்துறையின் புத்தகவாரியத்தின் தலைவருக்கும் கல்விஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.