
3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரம்…
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காமில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றினர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.
அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பயணித்த 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
இந்த சோக சம்பவத்தைடுத்து தீவிர வாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.