மோடியின் விளம்பரச் செலவுக்கு குஜராத் மக்கள் கடனாளியாவதா? -ராகுல் காந்தி சராமரி கேள்வி

First Published Nov 30, 2017, 9:16 PM IST
Highlights
Gujarat has a debt of Rs 37 thousand on each head of Prime Minister Modis advertising expenditure.


பிரதமர் மோடியின் விளம்பரச் செலவுக்காக குஜராத் மக்கள் ஒவ்வொரு தலையிலும் ரூ.37 ஆயிரம் கடன் இருக்கிறது. மோடியின் விளம்பரச் செலவுக்கு, மக்கள் கடனாளியா? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரம்

குஜராத் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 4 மற்றும் 9ந்தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது தேர்தல் பிரசாரத்தில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி, விவசாயிகள் பிரச்சினை, ரபேல் போர்விமான ஒப்பந்தம் ஆகியவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், குஜராத்தில் அம்ரேலி நகரில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது-

ரூ.37 ஆயிரம் கடன் சுமை

குஜராத் மாநிலத்தின் கடன் கடந்த 22 ஆண்டுகளாக ஏன் அதிகரித்துவிட்டது தெரியுமா?. கடந்த 1995ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் கடன் என்பது ரூ.9 ஆயிரத்து 183 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் மாநிலத்தின் கடன் ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர் தலையிலும் ரூ.37 ஆயிரம் கடன் சுமை இருக்கிறது.

பிரதமர் மோடியின் தவறான நிதி மேலாண்மைக்கும், விளம்பரச் செலவுக்கும் குஜராத் மக்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். உங்களின் விளம்பரச் செலவுக்கு குஜராத் மக்கள் கடனாளியா?.

கிராமங்களை விற்கிறார்

குஜராத்தில் உள்ள கிராமங்களை தொழில் அதிபர்களுக்கு மோடி விற்று விட்டார். தொழிலதிபர்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், இவரின் அரசில் உள்ள நிதித்துறை அமைச்சரோ கடன்தள்ளுபடி என்பது தவறான கொள்கை என்கிறார் . இவ்வாறு பேசினார்.

45 ஆண்டுகள் ஆகுமா?

முன்னதாக ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று சில கேள்விகளை பிரதமர் மோடிக்கு எழுப்பி இருந்தார். அதில், “ கடந்த 2012ம் ஆண்டில் குஜராத் மாநிலத்திந் முதல்வராக இருந்த மோடி, 50 லட்சம் வீடுகளை கட்டிக்கொடுப்பேன் என்று வாக்களித்தார். ஆனால், இப்போது வரை 4.72 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, மீத முள்ள 45 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க இன்னும் 45 ஆண்டுகள் தேவைப்படுமா?

click me!