
ஜெய்ப்பூர்
உளவுத்துறை காவலாளர்களுக்கான மண்டல பயிற்சி மைய விழாவில் கலந்துகொள்ள வந்த ராஜ்நாத் சிங்-க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அணிவகுப்பு மரியாதையை தர மறுத்து காவலாளர்கள் மொத்தமாக விடுப்பு எடுத்து உயரதிகாரிகளுக்கு கிலியை ஏற்படுத்தினர்.
வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் ராஜஸ்தானில் பாஜக-வின் ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள ஜோத்பூரில் நேற்று முன்தினம் உளவுத்துறை காவலாளர்களுக்கான மண்டல பயிற்சி மையம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில், கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவரும் பங்கேற்க வருவதாக ஒப்புக்கொண்டார். அதனால், ராஜ்நாத் சிங்குக்கு காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால், அணிவகுப்பு மரியாதைக்காக தேர்வுச் செய்யப்பட்டிருந்த காவலாளர்கள் உள்பட 250 பேர் திடீரென மொத்தமாக விடுப்பில் சென்றுவிட்டனர். அதுவும் ராஜ்நாத் சிங் வருகைதரும் அந்த ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
இதனால் வேறு காவலாளர்களைக் கொண்டு ராஜ்நாத் சிங்குக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கி சமாளித்தனர் காவல்துறை உயரதிகாரிகள்.
இருப்பினும் மத்திய உள்துறை மந்திரிக்கு வழங்கப்பட இருந்த அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்க வேண்டிய கடமையை உதறித் தள்ளிவிட்டு, ராஜ்நாத் சிங்கை புறக்கணித்துவிட்டும் காவலாளர்கள் ஓட்டு மொத்தமாக விடுப்பில் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே, மக்கள் மத்தியில் பாஜக மீது அதிருப்தி அலைகள் வீசிக் கொண்டிருக்கும் வேளையில் அரசு அதிகாரிகளான காவல்துறையினர் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது ஆளுங்கட்சியை ஆட்டம் காண வைத்திருக்கும்.
காவலளர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்தபோது, அந்த மாநிலத்தில் காவலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ரூ.24 ஆயிரம் சம்பளத்தை ரூ.19 ஆயிரமாக குறைக்க முடிவு எடுத்துள்ளார்களாம். அதனால்தான் காவலாளர்கள் இப்படி செய்தார்கள் என்று சொல்கிறார்கள்.
இதுபற்றிய தகவல்களை ஜோத்பூர் காவல் ஆய்வாளர் அசோக் ரத்தோர் நேற்று வெளியிட்டார்.
அதில், ‘‘முன் அனுமதி பெறாமல், காவலாளர்கள் திடீர் விடுப்பில் சென்றது ஒழுக்கக்கேடு ஆகும். இது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உகந்தது ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.
இதனிடையே ஜோத்பூர் காவல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு கூடுதல் காவல் டி.ஜி.பி., எம்.எல்.லத்தார் வந்தார், அவருக்கும் காவலாளர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்க மறுத்தனர். இதனாலும் பரபரப்பு ஏற்பட்டது.