அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பு..!

First Published Nov 10, 2017, 12:27 PM IST
Highlights
gst tax rate may reduce for some essential items


அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைக்கவும், வர்த்தகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விற்பனை வரி, சேவை வரி, மதிப்பு கூட்டுவரி உள்ளிட்ட மறைமுக வரிகள், மாநிலந்தோறும் வெவ்வேறு விகிதத்தில் வசூலிக்கப்பட்டு வந்தன. அதை மாற்றி, ஒரே நாடு-ஒரே வரி என்பதை அடிப்படையாகக் கொண்டு சரக்கு மற்றும் சேவை(ஜிஎஸ்டி) வரிவிதிப்பு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த வரியும் ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்ச வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5% வரியை 1%ஆக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை 12%ஆக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் சிறு வர்த்தர்கள் பயன்பெறும் வகையில் சலுகை அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. மேலும் மக்கள் அதிகளவில் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிகிறது.

28% வரி  விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களுக்கு 18%ஆக வரி குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!