
வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வாடகை ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாகும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ வீடு, ஷாப்பிங் மால்கள், இடம், வர்த்தக கட்டிடம் ஆகியவற்றை வர்த்தக நோக்கில் வாடகைவிட்டு, ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டினால், அது ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படும்.
இதில் குடியிருக்கும் வீடுகளில் இருந்து வசூலிக்கும் வாடகைக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால், உங்கள் வீட்டை வர்த்தக நோக்கத்துக்காக வாடகைக்கு விட்டு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக சம்பாதித்தால், அதற்கு வரி விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. நெட்வொர்கின் தலைமை நிர்வாக அதிகாரி பிரகாஷ் குமார் கூறுகையில், “உற்பத்தி வரி, சேவைவரி, வாட் வரி செலுத்திக்கொண்டு இருந்த 69.32 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் வந்துள்ளனர்.
இதற்கு முன் 80லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுக வரிவிதிப்புக்குள் இருந்தனர். இதில் 38.51 லட்சம் பேருக்கு முழுமையான பதிவு முடிந்து, ஜி.எஸ்.டி. சான்று கொடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 30.80 லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். மூலம், ஜி.எஸ்.டி.எனில் பதிவு செய்வது குறித்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும்,4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜி.எஸ்.டி.யில் புதிதாகஇணைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.