
தோளில் புத்தகப் பை, சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் பார்த்து இருக்கிறோம், பாட்டிகளை பார்த்து இருக்கிறோமா!..
மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில், 60வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்களுக்காக பிரத்யேக பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காகத்தான் ‘பிங்க்’ நிற சீருடை அணிந்து, முதுகில் புத்தக பையை சுமந்துகொண்டு பாட்டிகள் செல்கிறார்கள்.
60 வயதுக்கு மேல்
தானே பகுதி அருகே உள்ள பாங்கனே கிராமத்தில் ‘அஜிபைஞ்ச் சாலா’ என்ற பெயரில் பாட்டிகளுக்கான தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட 60 வயது முதல் 90 வயதான பாட்டிகள் ஆர்வத்துடன் எழுதவும், படிக்கவும் கற்று வருகிறார்கள்.
அடிப்படை கல்வி
இந்த பள்ளியில் படிக்கும் பாட்டிகளுக்கு அடிப்படைப் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல் கணிதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளும், ‘நர்சரி ரைம்ஸ்’ போன்றவைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
உதவிகள்
மோதிராம் அறக்கட்டளையின் உதவியுடன், கூட்டாக இணைந்து செயல்படும் பாங்கனே ஜில்லா பரிசத் பள்ளியில் 45 வயதான யோகேந்திரபங்கர் என்பவர் வகுப்புகளை எடுத்து வருகிறார்.
இந்த மோதிராம் அறக்கட்டளையே பாட்டிகளுக்கு பிங்க் சீருடை, புத்தகங்கள், புத்தகங்கள், பை, எழுதுபொருட்கள், பள்ளியில் கரும்பலகை ஆகியவற்றை இலவசமாக வழங்கியுள்ளது.
தன்னம்பிக்கை வந்துள்ளது
இந்த பள்ளியில் படித்துவரும் கன்டா என்ற பாட்டி கூறுகையில், “ தொடக்கத்தில் நான் இந்தபள்ளிக்கு செல்ல மிகவும் வெட்கப்பட்டேன். ஆனால், இப்போது, என் வயதுடைய, என்னைக் காட்டிலும் வயதில் மூத்த பெண்களுடன் சேர்ந்து படிக்கிறேன். இப்போது என்னால், படிக்கவும், எழுதவும் முடிகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். கல்வி சுயமரியாதையை அளிக்கிறது. ஆவணங்களில் விரல்ரேகை வைத்த நான் இப்போது கையொப்பம் இடுகிறேன். யாருடைய உதவியின்றி செயல்படுகிறேன். என் பேத்திக்கும் வீட்டுப்பாடம் கற்பிக்கிறேன்'' என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
87வயதான ராமா பாய் கூறுகையில், “ சிறுவயதில் இருக்கும்போது கல்வியின் முக்கியத்துவத்தை நாங்கள் உணரவில்லை. இப்போது நான் சுயமாக எழுதுகிறேன், படிக்கிறேன்'' என்கிறார்.
நாள்தோறும் 75 கி.மீ. பயணம்
இந்த பள்ளியில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் பங்கர் கூறுகையில், “ பாட்டிகளுக்கு என பிரத்யேக பள்ளியை தொடங்கும் சிந்தனை கடந்த ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், இந்த கிராமத்தை தேர்வுசெய்து இங்குள்ள கல்வியறிரு இல்லாத பெண்களுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தோம்.
என்னுடைய கடமை கற்பிப்பது என உணர்ந்தேன். அறக்கட்டளையிடம் இருந்து உதவி கிடைத்தவுடன் சிறிய இடத்தில் பள்ளியை உருவாக்கி, கடந்த ஆண்டு மகளிர் திணத்தில் 28 பாட்டிகளுடன் பள்ளியை தொடங்கினேன். இந்த சேவையை செய்ய நாள்தோறும் 75 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருகிறேன்.
இந்த பாட்டிகளுக்கு அரசு ஏதேனும் உதவி செய்து, ஊக்கப்படுத்தினால் அதை வரவேற்பேன். மற்ற மாநிலங்களிலும் இது எதிரொலித்தால் அது புரட்சியாக இருக்கும். மேலும், பெண்கள் கழிப்பறை குறித்த விழிப்புணர்வும் ஊட்டப்பட்டு, கழிப்பறையும் அமைக்க உதவி செய்யப்படுகிறது'' என்றார்.