திருப்பதியில் லட்டு வழங்குவதால் ரூ.140 கோடி நஷ்டமாம்.. - பக்தர்களுக்கு லட்டுகளை குறைக்க முடிவு

First Published Feb 20, 2017, 4:25 PM IST
Highlights


நாட்டிலேயே மிகவும் பணக்கார கடவுளான, திருப்பதி வெங்டேசவரா கோயிலில் மானிய விலையில் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதால், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.140 கோடி இழப்பு ஏற்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.

பக்தர்களுக்கு லட்டு

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபின், அவர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. அதன்பின், தேவைப்படுபவர்கள் பணம் கொடுத்து லட்டு பெற்றுக்கொள்ளலாம்.

மானியவிலை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக மானிய விலையில் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லட்டு தயாரிக்க தேவஸ்தானத்துக்கு ரூ. 32.50 காசு அடக்கச் செலவு வரும் நிலையில், பக்தர்களுக்காக ஒரு லட்டு ரூ.25 விலையில் வழங்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு மட்டுமே திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு 10 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரூ.23 கோடி இழப்பு

இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் கால்கடுக்க நின்று தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு கொடுக்கப்படுகிறது, இதன்மூலம் ரூ. 23 கோடி இழப்பு ஏற்படுகிறது.

மேலும், படிவழியாக நடந்து வந்து தரிசனம் செய்வதை உற்சாகப்படுத்த கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக தரப்படுகிறது. இதன் மூலம், தேவஸ்தானத்துக்கு ரூ.22.7 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 70 லட்சம் பக்தர்கள் படியில் நடந்து வந்து தரிசனம் செய்கிறார்கள்.

2 லட்டு

அதுமட்டுமல்லாமல், ரூ.500 பணம் கொடுத்து வி.ஐ.பி. டிக்கெட் மூலம் தரிசனம் செய்யவருபவர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக தரப்படுகிறது. இதுபோன்ற இலவசங்கள், மானியங்களால் ஆண்டுக்கு ரூ.140 கோடி இழப்பு தேவஸ்தானத்துக்கு ஏற்படுகிறது.

முடிவு

இந்நிலையில், லட்டுகள் விற்பனையில் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க, பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளின் விலையை இப்போதுள்ள நிலையில் அதிகரிக்க தேவஸ்தானத்துக்கு விருப்பம் இல்லை. மாறாக, டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டுகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

click me!