"ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை" - புதிய சட்டம் விரைவில்

First Published Feb 5, 2017, 1:24 PM IST
Highlights


ஆசிட் வீச்சால் பாதிக்கட்ட பெண்கள், ஆண்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கும் புதிய சட்டத்தை மத்தியஅரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இவர்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு அரசு வேலையில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டத்தின்படி, அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 3சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயரப் போகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்28-ந்தேதி மாற்றுத்தினாளிகள் உரிமைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தில் விதிமுறைகளை சேர்த்து, அதை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை திட்டமிட்டுள்ளது.

மத்தியஅமைச்சர் மேனகா காந்தி, சமூகநீதி அமைச்சகத்துக்கு டுவிட்டரில் விடுத்த கோரிக்கையில், “ மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் கொண்டு வரும் போது, அதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுமாறு இருக்க வேண்டும். ஆசிட் வீச்சால் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரமாக தொடர் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த புதிய சட்டத்தின் படி, இனி, வரும்காலத்தில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகள் என்ற பட்டியலுக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது குறித்து சமூக நீதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அவானிஷ் கே. அவாஷ்தி கூறுகையில், “ ஏப்ரல் மாதத்தில் புதிய சட்டதுக்கான விதிகள் அனைத்தும் தயாராகி, நடைமுறைப்படுத்த தயாராகிவிடும்” என்றார்.

கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஆசிட் வீச்சு தொடர்பாக நாடுமுழுவதும், 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,279 பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடம்பில் உள்ள தோலின் இருஅடுக்குகளும் கடுமையாக வெந்து, கண், காது, மூக்கு, வாய்பகுதி என அனைத்தும் சேதமடைந்துள்ளது, சிலர் பார்வையற்றவர்களாகவும் மாறியுள்ளனர். 

இந்த ஆசிட்வீச்சால், பாதிக்கப்படுபவர்களின் முக்கிய சிக்கல், அவர்களால் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுவது தான். தோலின் தழும்புகள் இருக்கி பிடிப்பதால், அவர்களால் சுவாசிப்பதும், செயல்படுவதும் கடினமாகிவிடுகிறது என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

click me!