
நாட்டில் ஊழலை தடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் சந்தேகத்துக்கு இடமான வகையில் செய்யப்படும் வங்கிப் பரிமாற்றம் கண்காணிக்கப்படும் என மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய ஊழல்தடுப்பு ஆணையர் டி.எம். பாஷின் நிருபர்களிடம் டெல்லியில் நேற்று கூறுகையில், “ அரசு ஊழியர்களிடையே ஊழலை தடுக்கும் வகையில் அவர்களின் சந்தேகத்துக்கு இடமான வகையில் மேற்கொள்ளும் வங்கிப் பரிமாற்றத்தை கண்காணிக்க இருக்கிறோம். இதற்காக மத்திய நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து தேவையான தகவல்களை ஆணையம் பெறும். அவ்வாறு ஊழல் நடந்து இருந்தால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் தங்களின் கணக்கில் இருந்து செய்யப்படும் வங்கிப்பரிமாற்றம் குறித்து குறிப்பிட்ட இடைவௌியில் தொடர்ந்து தகவல்களை நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து பெற்று வருகிறோம். நிதி புலனாய்வு அமைப்பு, அரசு ஊழியர்களின் வங்கிப்பரிமாற்றத்தை ஆய்வு செய்து, தகவல்களை பரவலாக்கி, கருப்புபணப் பதுக்களில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்.
ஒரு ஊழியர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணப்பரிமாற்றம் செய்தால், அது கருப்புபணப்பரிமாற்றமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, வங்கி முறையில் இருந்து கருப்புபணத்தை அனைத்து வழிகளிலும் தடுப்பதாகும்’’ எனத் தெரிவித்தார்.