
கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தியது குறித்து கருத்து தெரிவித்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, அரசில் ஆளுநர் தலையிடும் நோய், தமிழகத்துக்கும் பரவியுள்ளதாக கூறியுள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தின்போது கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள், தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால், அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.
துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூ’ய்மை பணியிலும் அவர் ஈடுபட்டார். அதேபோல் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் அவர் ஆய்வு செய்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரண்டாவது நாளாக தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னரும், ஆளுநர் பன்வாரிலால் தூய்மை பணியில்
ஈடுபட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநில அரசைக் கட்டுப்படுத்தும் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுதுகிறது என்று குற்றம் சாட்டினார். ஆளுநர் ஆய்வு செய்வது தவறல்ல, ஆனால் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுதான் தவறு என்றும் அவர் கூறினார். அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.