"பணியின்போது சுகாதார ஊழியர்கள் முழங்கைக்குக் கீழ் அணியும் கைக்கடிகாரம், வளையல்கள், மோதிரம், பிரேஸ்லட், மத அடையாளக் கயிறுகள் போன்ற அணிகலன்கள் சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கிறது" என்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகள் இருக்கும் பகுதிகள், அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகள் இருக்கும் வார்டுகள் ஆகிய இடங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி, தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
"பணியின்போது சுகாதார ஊழியர்கள் முழங்கைக்குக் கீழ் அணியும் கைக்கடிகாரம், வளையல்கள், மோதிரம், பிரேஸ்லட், மத அடையாளக் கயிறுகள் போன்ற அணிகலன்கள் சருமத்தில் உள்ள நுண்ணுயிர்கள் வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கிறது" என்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வாட்ச் அணிவது தொடர்பாக தேவைக்கேற்ப சிறு திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், "அவசரச் சிகிச்சைப் பிரிவில் செல்போன்கள் பயன்படுத்துவதால் கிருமித் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது" எனவும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை சார்ந்த நோய்த் தொற்றுகள் குறித்து லேன்சட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் இந்த சுற்றறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ளது.