10ஆம் வகுப்பில் முதலிடம் பெறாமலேயே இருந்திருக்கலாம்: பிராச்சி நிகாம் வருத்தம்!

By Manikanda PrabuFirst Published Apr 28, 2024, 1:23 PM IST
Highlights

ஆன்லைனில் தனது தோற்றம் குறித்து கிண்டலடிக்கப்படுவதற்கு பிராச்சி நிகாம் வருத்தம் தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று அதாவது 98.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று சீதாப்பூர் பால் வித்யா மந்திர் பள்ளியில் படித்த மாணவி பிராச்சி நிகாம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஆனால், சிறுமி பிராச்சி நிகாமின் புகைப்படத்தை வைத்து பலரும் அவரை உருவ கேலி செய்து வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பலரும் அவரை கேலி செய்து வருகின்றனர். ஹார்மோன் பிரச்சினை காரணமாக, ஆண்களை போன்று பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது இயல்பாக நடக்கும் விஷயம். ஆனால், அதனை குறிப்பிட்டு மாணவி பிராச்சி நிகாமை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்லைனில் தனது தோற்றம் குறித்து கிண்டலடிக்கப்படுவதற்கு பிராச்சி நிகாம் வருத்தம் தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பில் முதலிடம் பெறாமலேயே இருந்திருக்கலாம் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிரித்து கொண்டே பேசும் அவர், “எனது சாதனையை விட ட்ரோல்களே அதிகமாக உள்ளன. சாதனைக்கு பதிலாக உருவகேலிகள் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன. இதற்கு முதலிடம் பெறாலமலேயே இருந்திருக்கலாம். முதலிடம் பெற்றதால்தானே சமூக வலைதளங்களில் அறியப்பட்டேன். தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தால் சமூக ஊடகங்களில் பிரபலமாயிருக்க மாட்டேன். எனது முகத்தில் வளர்ந்துள்ள முடிகளுக்கு இதுபோன்ற ட்ரோல்களுக்கு நான் உள்ளாயிருக்க மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு சிலர் எனக்கு ஆதரவு தெரிவித்து பேசுகின்றனர். முகத்தில் வளரும் முடி ஹார்மோன் பிரச்சினையால் என ட்ரோல் செய்பவர்களுக்கு கற்பிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். தனது தோற்றத்திற்காக, நேரில் சந்திக்கும் வழக்கமான பிரச்சினைகள் குறித்து பேசும் அவர், இதுகுறித்து மோசமாக உணர்கிறேன். மக்கள் அவர்கள் நினைப்பதை சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள். அதற்காக எதுவும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

தன்னை உருவகேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள பிராச்சி நிகாம், “நான் இன்ஜினியராக வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுத இருக்கிறேன். என்னை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்கின்றனர். இப்படி கிண்டல் செய்வது, ட்ரோல் செய்வதை மட்டுமே சிலர் முழுநேரமாகவும் செய்து வருகின்றனர். எனக்கு அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்துக்காக என் ஆசிரியர்களோ சக மாணவர்களோ ஒரு போதும் கேலி செய்ததும் இல்லை. நானும் இதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!

பிராச்சி நிகாமின் பள்ளி தலைமை ஆசிரியர், அவரது நண்பர்கள், பெற்றோர் என அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். “ட்ரோல்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் என் மகளை ஊக்கப்படுத்தினேன். ஆச்சரியமாக, பல சமூக ஊடக பயனர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு என் மகளுக்கு ஆதரவளித்தனர்.” என அவரது தாயார் மம்தா நிகாம் தனது மகளை ஊக்கப்படுத்தியது குறித்து தெரிவித்துள்ளார்.

பிராச்சியின் தந்தை சந்திர பிரகாஷ் நிகாம் கூறுகையில், அவரும் அவரது குடும்பத்தினரும் ட்ரோலிங் குறித்து வருத்தப்பட்டாலும், அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றார். அதேசமயம், தனது மகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை பெற திட்டமிட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

click me!