
கூகுள் நிறுவனமானது தேடுதளத்தில் பாரபட்சம் காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், 135 கோடியே 86 லட்சம் ரூபாயை அபராதம் விதித்து சிசிஐ உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தேடல் நிறுவனமான கூகுளில், அனைத்து விதமான சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும் வகையில் முன்னணி தேடுதல் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
ஒரு வார்த்தையை கூகுளில் போட்டால் அதற்கு சம்பந்தமான பல்வேறு வார்த்தைகளை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் வகையில் உள்ளது.
இத்தகைய தனித்துவமான கூகுள் சர்ச் இன்ஜின், தனியாருக்கு சொந்தமான பிரபல திருமணம் தளமான மேட்ரிமோனி.காம் தளத்தின் பெயரை தேடலில் காட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் மீது 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில் மற்ற நிறுவனத்தின் பெயரை காட்டுவதில் கூகுள் அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும், ஒருதலைபட்சமாக நடந்துக்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கை இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் விசாரித்து வந்தது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், 60 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.