
பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று கிளம்பும் மோடி, நான்கு நாட்கள் அந்த நாடுகளில் இருந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
பிரதமராக உள்ளவர்கள் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கும் மற்ற நாடுகளோடு கலாச்சார, வர்த்தக, பாதுகாப்பு உறவை வளர்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டு பயணம் செல்வார்கள். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தலைவருக்கு வெளிநாட்டு பயணம் அவசியம்.
ஆனால், “உலகம் சுற்றும் வாலிபன்” என வர்ணிக்கப்படும் பிரதமர் மோடி, இதற்கு முன்பு பிரதமராயிருந்தவர்களைக் காட்டிலும் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதனால் இவரது பயணத்தால் நாட்டிற்கு கிடைத்த பலன்கள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடைபெற, பிரதமர் மோடியின் மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு சிவில் ஏவியேஷன், வங்கித்துறை, பாதுகாப்பு, ரீடெய்ல், பிராட்காஸ்டிங் போன்ற துறைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மோடி ஆட்சிக்கு வந்ததுமே பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்டன. மேலும் பல வெளிநாடுகளுக்கு சென்று மேக் இன் இந்தியா திட்டம் குறித்த விவரித்து அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவித்தார். அதற்கும் ஓரளவிற்கு பலன் இருந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
உலகின் பல நாடுகளுக்கு முதன்முதலில் பயணம் செய்த இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றிருக்கிறார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதிலும் மோடி சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றே கூறவேண்டும்.
ஆனால் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், அவரது பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி இன்று கிளம்புகிறார். இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமரின் சுற்றுப்பயணம் இருக்கும். முதற்கட்டமாக ஜோர்டான் தலைநகர் அம்மானில் வெள்ளிக்கிழமை இரவு தங்கும் பிரதமர், சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ரமல்லா நகர் சென்றடைவார்.
அங்கு அந்நாட்டு அதிபர் மெஹமூத் அப்பாஸ் உடன் பேச்சு நடத்திய பின்னர், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
பின்னர், அந்நாட்டின் முதல் அதிபரான யாசர் அராஃபத் அருங்காட்சியகத்தை மோடி பார்வையிடுகிறார். பின்னர் துபாய் செல்லும் பிரதமர், ஆறாவது உலக நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்.
தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசின் அதிபர் கலிஃபா பின் ஸயாத் அல் நாயன், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பயணத்தின் நிறைவாக ஓமன் நாட்டின் மஸ்கட்டில் இந்திய வம்சாவளியினர் நடத்தும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளார். ஓமன் நாட்டின் துணை பிரதமரையும் மோடி சந்திக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.