ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு உணவு பறிமாற தங்கம் முலாம் பூசப்பட்ட, வெள்ளியால் ஆன தட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன
ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரவுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது. செப்டம்பர் 9-10 வரை டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்காக தலைநகர் டெல்லி முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க டெல்லியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்தியாவின் மகத்தான விருந்தோம்பல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக உலக தலைவர்களுக்கு வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் உணவுகள் பரிமாறாப்படவுள்ளன. இதற்காக தங்க முலாம் பூசப்பட்ட, வெள்ளியால் ஆன தட்டுகள், குவளைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்கள் நுணுக்கமாக பொறிக்கப்பட்ட வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்களால் சுமார் 50,000 மணி நேரத்தில் சுமார் சுமார் 15,000 வெள்ளிப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த உலோகப்பொருள் நிறுவனமான ஐரிஸ் தெரிவித்துள்ளது. விருந்தினர்களுக்கு உணவை வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பொருட்களை அந்த நிறுவனம் நேற்று முன் தினம் டெல்லியில் காட்சிப்படுத்தியது.
நாளை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை!
பெரும்பாலான பாத்திரங்கள் எஃகு அல்லது பித்தளை கொண்டு வடிவமைக்கப்பட்டது அல்லது இந்த இரண்டின் கலவையுடன் வெள்ளி பூச்சும் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பொருட்களில் தங்க முலாம் பூசப்பட்டு வரவேற்பு பானங்கள் பரிமாறப்படும் என்றும் ஐரிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட G20 பிரதிநிதிகளுக்கு சேவை செய்வதற்காக தேசிய தலைநகரில் உள்ள பல்வேறு சொகுசு ஹோட்டல்கள் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உணவு பரிமாறும் பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டன எனவும் ஐரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபல ஐடிசி ஹோட்டலிடம் வழங்கப்பட்டுள்ளது. தெருவோர உணவு மற்றும் தினை சார்ந்த உணவுகளை உள்ளடக்கியதாக உணவுப் பட்டியல் இருக்கும் என ஜி20 செயலகம் தெரிவித்துள்ளது.