ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வரவுள்ளார்
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இந்தியா வரவுள்ளார்.
நாளை தொடங்கும் அவரது பயணம் மூன்று நாட்கள் வரை நீடிக்கிறது. அமெரிக்காவில் நாளை கிளம்பும் அவர், இடையில் ஜெர்மனியில் இடைநிறுத்தம் செய்கிறார். பின்னர் அன்றைய தினமே டெல்லி வந்தடையவுள்ளார்.
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இரு தலைவர்களும் வருகிற நாளை இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர். இதனை வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க மூலோபாய தகவல்தொடர்புகளுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
வேலை விசாவில் புதிய மாற்றம்.. குவைத் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
தொடர்ந்து, சனிக்கிழமை காலை ஜி20 உச்சி மாநாட்டின் முதல் அமர்வில் கலந்து கொள்கிறார். பின்னர், அன்றைய தினம் பிற்பகலில் இரண்டாவது அமர்வு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். இரவில் ஜி20 தலைவர்கள் உடனான இரவு விருந்து மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் ஜோ பைடன் கலந்து கொள்ளவுள்ளார்.
இதையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஜி20 தலைவர்களுடன் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு செல்லவுள்ளார். தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து நேரடியாக வியட்நாமுக்கு ஜோ பைடன் செல்லவுள்ளார்.