
கோவா மாநிலத்தில் ஆளும் பாரதியஜனதா கட்சியை ஓரம்கட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தனது வெற்றியை தக்கவைக்கவே கடுமையாக போராடி வருகிறார் என நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாரதியஜனதா கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. டெல்லியைத் தவிர்த்து, முதல் முறையாக வெளிமாநிலத்தில் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் தனது தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டிய சூழல் நிலவுகிறது. 21 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற சூழலில் காங்கிரஸ் கட்சியே இங்கு முன்னிலை பெற்று வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டுக்கு பின், கோவாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான சூழல் நிலவி வருவதை, வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் காட்டுகின்றன.
கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றியாக சன்வோர்டம் தொகதியில் பா.ஜனதா வேட்பாளர் கணேஷ் கோங்கரை காங்கிரஸ் வேட்பாளர் தீபக் பவாஸ்கர் தோற்கடித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.