
கோவாவில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறும் நிலையில், கோவா தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவின் சிறிய மாநிலமான கோவாவின் தேர்தல் முடிவுகளை அறிய அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கிறார்கள். பல முனை போட்டி உருவாகியுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யாரால் யார் கால் வாரப்படும் என்ற அளவுக்கு இத்தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவாவில் மொத்தமே 40 சட்டப்பேரவைத் தொகுதிகள்தான். 21 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை அமைக்க உரிமை கோரலாம். இங்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 76. 61 சதவீத வாக்குகள் பதிவாயின. இத்தேர்தலில் ஆளும் பாஜக தனித்து களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவா முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆம் ஆத்மி கட்சி தனித்து களமிறங்கியது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் மகாஷ்டிரவாடி கோமந்த கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டாகத் தேர்தலில் போட்டியிட்டன. இந்தச் சிறிய மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 5 கூட்டணிகள் மல்லுக்கட்டுகின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. பாஜகவோ 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம் என்று பேசி முடிவு எடுப்பதற்கு முன்பே பாஜக, மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி, கோவா முன்னணி கட்சி, சுயேட்சைகள் ஆதரவுடன் முந்திக்கொண்டு ஆட்சியை அமைத்தது. மனோக்கர் பாரிக்கர் முதல்வரானார்.
மணிப்பூரைப் போலவே தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சி வரிசையில்தான் காங்கிரஸால் உட்கார முடிந்தது. ஆக, இந்தத் தேர்தலில் 5 முனை போட்டிகள் ஏற்பட்டுள்ளன. முதன் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இங்கு களத்தில் இறங்கியுள்ளது. சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைக்க முயன்றன. ஆனால், காங்கிரஸ் தங்களுக்கு தனித்து போட்டியிட இங்கு பலம் இருப்பதாக் கூறி, கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இதனால், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பிரிக்கும் வாக்குகள் காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரலாம். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் இருக்கிறது. மனோக்கர் பாரிக்கர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த பிறகு முதல்வரான பிரமோத் சாவந்த் மீது அதிருப்தி அலை பெரிய அளவில் இல்லை. ஆனால், 10 ஆண்டுகள் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் இயல்பகவே வரும் எதிர்ப்பலை இருக்கவே செய்கிறது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, வேலை வாய்ப்பு இழப்பு, சுற்றுலாவை பெரிய அளவில் நம்பியுள்ள கோவாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என பிரச்சினைகள் அணி வகுக்கின்றன. என்றாலும் பிரதமர் மோடியின் தொடர் பிரசாரங்களால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. காங்கிரஸ் சார்பில் இங்கு தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் களமிறக்கப்பட்டார். அவர் அமைத்துக்கொடுத்த திட்டப்படி காங்கிரஸ் கட்சி பயணித்திருக்கிறது. தேடி வந்த கூட்டணியை காங்கிரஸ் வேண்டாம் என்று மறுத்ததற்கு ப.சிதம்பரமே காரணம் என்றும், பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் உதவுகிறது என்றும் பிற எதிர்க்கட்சிகள் ப.சிதம்பரத்தைத்தான் வசைபாடின.
கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய பெருவாரியான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. என்றாலும் போட்டி பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை போலவே பாஜகவும் காங்கிரஸும் நெருக்கமாக வெற்றி பெறலாம். அப்படி ஒரு சூழல் வந்தால் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி-திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கூட்டணி, ஆம் ஆத்மி ஆகியவை கிங் மேக்கர்களாக உருவெடுக்கலாம். அதனால்தான் கடந்த முறை போல் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது. இதேபோல ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் ரிசார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக இப்போதே அறிவித்துவிட்டது. பாஜக மேலிட தலைவர்கள் அதற்கான பேச்சுவார்த்தையிலும் இறங்கிவிட்டனர். தேர்தல் முடிவு வரும் முன்பே கோவா பரபரப்பாகிவிட்டது. வாக்கு எண்ணிக்கைக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில், கோவாவில் என்ன நடக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிய வரும்.