
இன்று உலகம் முழுவதும் லவ்வர்ஸ்டே கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் சார்ந்த விஷயங்கள், எதிர்ப்பு விஷயங்கள் என இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் லவ்வர்ஸ் டேக்கு எதிராக இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காதல் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்துகின்றனர்.
இன்று சபர்மதி ஆற்றங்கரைக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் ஜோடிகளாக வந்த காதலர்களை, அவர்கள் தடிகள் கொண்டு தாக்கி விரட்டி அடித்தனர். இதுபோல் பல்வேறு இடங்களில் காதலர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
ஆனாலும், லவ்வர்ஸ்டேக்கு ஆதரவாகவும் சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கர்நாடகவில் 6 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவரும், கர்நாடகா சலுவாலி வட்டாள் பக்ஷா என்ற அமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், காதலர் தினத்தையொட்டி இரண்டு ஆடுகளுக்கு திருமணம் செய்து வைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு மாநில அரசு ரூபாய் 50,000 முதல் 1 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்றார். காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.