பட்டாசு வெடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது. அதேபோல், கவனமுடன் பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும், எதிர்பாராதவிதமாக சில சமயங்களில் பட்டாசு விபத்து ஏற்படுகிறது.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் - அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா (4) பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த சிறுமியை, அவரது பெற்றோரும், உறவினர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் பதவியை எதிர்பார்த்து கட்சியில் இல்லை: சி.டி.ரவி!
இந்த நிலையில், பட்டாசு வெடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிதியுதவியும் அறிவித்துள்ளார். இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.