
பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக, சந்தேகப்படும் நபர்களின் வரை படங்களை வெளியிட்டுள்ளது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு.
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பத்திரிகை ஆசிரியருமான கௌரி லங்கேஷ்(55) கடந்த செப்டம்பர் மாதம் 5 ம் தேதி இரவு, அவரது வீட்டின் முன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முற்போக்கு சிந்தனையாளரான கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கௌரி லங்கேஷ் வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டார். சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலையாளிகள் குறித்த விவரங்களை சேகரித்து வந்தனர். அப்போது, கொலையாளிகள், ஒரு வாரத்திற்கு கௌரி லங்கேஷை கண்காணித்து வந்ததாகவும், பல்சர் பைக்கில் அப்பகுதியில் சுற்றிவந்தனர் என்றும், கொலையாளிகள் 25 முதல் 30 வயது உடையவர்களாகவும் அவர்கள் தங்களுடன் எடுத்து வந்த 7.6 மிமி பிஸ்டல் வகை துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்தக் கொலையில் சந்தேகப்படும் கொலையாளிகளின் வரைபடங்களை புலனாய்வுத் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக 200 முதல் 250 பேரை விசாரித்துள்ளோம் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறினர்.