
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என கருத்து தெரிவித்த புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் ராமசந்திர குஹாவுக்கு பா.ஜனதா கட்சியின் யுவமோர்சா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இடது சாரி சிந்தனையாளரும், மதவாதத்தை கடுமையாக எதிர்த்து எழுதி வந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சில அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 5ந்தேதி அவரின் வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “ பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் சங்பரிவாரங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம். இதற்கு முன் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் கொலையிலும் இவர்கள் தான் பேசப்பட்டார்கள். மத்தியில் ஆளும் ஆட்சியில் சகிப்பின்மை அதிகமாகி வருகிறது” எனத் தெரிவித்து இருந்தார்.
இதேபோல “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையி்ல் “ மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின் சகிப்பின்மையையும், வெறுப்புணர்வையும் ஊக்கப்படுத்தி வருகிறது. தங்களுக்கு சாதகமான தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும், குண்டர்கள் வழியாகவும் இதை பா.ஜனதா நிறைவேற்றுகிறது.
வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கிறோம். எழுத்தாளர்கள் கருத்துக்களைக் கூறியதற்காக கொல்லப்படுகிறார்கள். இது அனைவரையும் அடக்கி ஆளும், அமைதியாக்கும் முயற்சியாகும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, கர்நாடக பா.ஜனதா யுவமோர்ச்சா அமைப்பு ராமச்சந்திர குஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர ேவண்டும். இல்லாவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கர்நாடக பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் அஸ்வந்த் நாராயணா கூறுகையில், “ 3 நாட்களுக்குள் ராமசந்திர குஹா மன்னிப்பு கோரவிட்டால், எங்கள் கட்சி சட்டநடவடிக்கை எடுக்கும்” என்றார்.
பா.ஜனதா அளித்துள்ள சட்டப்பூர்வ நோட்டீசுக்கு பதில் அளித்து ராமச்சந்திர குஹா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “ ஒரு புத்தகம் அல்லது கட்டுரைக்கு பதில் அளிக்க மற்றொரு கட்டுரை, புத்தகத்தால் மட்டுமே முடியும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியிருக்கிறார்.
ஆனால், வாஜ்பாய் கூறிய இந்தியாவில் நாம் வாழவில்லை.
இந்தியா டுடே பத்திரிகையின், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள், கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.