
அரியானா மாநிலம், குருகிராமில் கடந்த வெள்ளிக்கிழமை 2-ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில், இது குறித்து 3 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிணமாக கிடந்தான்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, அந்த சிறுவன் சத்தமிட்டதால், கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பள்ளி பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, மாணவன் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவனின் தந்தை பிரதியுமான், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொலையான சிறுவனின் தந்தை பிரதியுமான் தாக்கூர், தனது மகன் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ இது ஒரு மாணவருக்கு ஏற்பட்ட நிலை என ஒதுக்க முடியாது. பள்ளிகளில் மாணவ,மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து சி.பி.எஸ்.சி. கல்வி வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும்.
அடுத்த 3 வாரங்களுக்குள் மாணவர் மர்ம மரணம் குறித்து அரியானா மாநில அரசும், மத்திய மனித வளத்துறையும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, சரியான பதில் அளிப்போம். ஒவ்வொரும் திருப்தி அடையும் சரியான தீர்வு காணப்படும்”என்றார்.
இதற்கிடையே ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் தலைவர் ரியான் பின்டோ, இயக்குநர் ஆல்பர்ட் பின்டோ ஆகியோரிடம் விசாரணை நடத்த அரியானா போலீசார், மும்பை விரைந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும், மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட மாணவரின் தந்தை பிரதியுமான் தாக்கூர் கூறுகையில், “ எனக்கு உள்ளூர் போலீசார் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணைதான் வேண்டும். 10 நிமிடங்களுக்குள் என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. பஸ்ஸின்நடத்துனர் முன்கூட்டியை என்மகனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். எனது மகன் கழிவறைக்கு சென்றவுடன் அவன் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது.
எனது மகன் உயிருக்கு போராடி கத்தும்போது யாரும் உதவிக்கு வரவில்லை. ஒருவளே வேண்டுமென்றே யாரும் வராமல் இருந்துவிட்டார்களா என்பதை அறிய வேண்டும். உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்றார்.