
சூரத் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த மகாத்மா காந்தியின் பேரன் கானுபாய் (87) காந்தி காலமானார்.
மகாத்மா காந்தியின் மறைவுக்கு பிறகு கானுபாய் காந்தி அமெரிக்காவுக்கு சென்று அங்கு படிப்பை முடித்தார். பிறகு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணியாற்றினார். அப்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பயோ மெடிக்கல் நிறுவனத்தில் பணியாற்றிய சிவலட்சுமி (90) என்பவரை திருமணம் செய்தார்.
அமெரிக்காவிலேயே 40 ஆண்டுகளாக வாழ்ந்த அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இறுதிகாலத்தை சொந்த நாட்டில் செலவிட முடிவு செய்த தம்பதியர் கடந்த 2014-ம் ஆண்டில் குஜராத் திரும்பினர்.
கடந்த வாரம் கானுபாய் காந்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சூரத் நகரில் உள்ள ராதாகிருஷ்ண ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் சிவஜோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கானுபாய் காந்தி நேற்றிரவு இறந்தார்.
இதுகுறித்து ஆசிரம நிர்வாகியான தீமன்த் பாதியா, கடந்த 22ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் கானுபாய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்தார்.
கானுபாய் மனைவியின் சிவலட்சுமிக்கு, காதுகேளாமை மற்றும் பல்வேறு நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். கானுபாய் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரணாப், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.