ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்துள்ளதால் மாநாட்டின் முடிவில் ஜி20 என்ற பெயர் ஜி21 என்று மாற்றப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க ஒன்றியம் சனிக்கிழமையன்று G20 நாடுகளுடன் புதிய நிரந்தர உறுப்பினராக இணைந்துள்ளது. உலகப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய அமைப்புகளில் ஒன்றான ஜி20 கூட்டமைப்பில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரான அஸாலி அஸ்ஸௌமானியை, நிரந்தர உறுப்பினராக அமர்த்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோது ஆப்பிரிக்க யூனியன் இணைய அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, “ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக இடம் வழங்கும் கோரிக்கை இந்தியா முன்மொழிந்தது. இதில் அனைவருக்கும் உடன்பாடு இருப்பதாக நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
"அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்க யூனியன் தலைவரை நிரந்தர ஜி20 உறுப்பினராக அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அஸ்ஸௌமானியை அழைத்து வந்தார். பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் மத்தியில் அவரை அமர வைத்தார்.
G20 நாடுகளுக்குத் தலைமை ஏற்றது முதல் இந்தியா, தெற்குலக நாடுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கூறிவருகிறது. இது ஜி20 மாநாட்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்துள்ளதால் ஜி20 என்ற பெயர் ஜி21 என்று மாற்றப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தியோப்பியாவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் உள்ளது. ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் 2022 இல் ஆப்பிரிக்க யூனியன் உருவாக்கப்பட்டது. ஆப்பிரிக்க யூனியன் தலைமைப் பதவி சுழற்சி முறையிலானது. அந்த அமைப்பு தற்போது 55 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால் அவற்றில் ஆறு நாடுகள் ராணுவ ஆட்சியின் கீழ் உள்ளன. அங்கு தற்போது இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 140 கோடி மக்களை உள்ளடக்கிய ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் மொத்தமாக 3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன.
ஜி20 இல் ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார். கர்நாடகாவின் ஹம்பியில் ஜூலை மாதம் நடைபெற்ற மூன்றாவது G20 ஷெர்பாஸ் கூட்டத்தின்போது உச்சிமாநாட்டிற்கான வரைவு அறிக்கையில் முறையான முன்மொழிவு சேர்க்கப்பட்டது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜி20 இல் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இந்தியாவிற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வளர்ந்துவரும் தெற்குலக நாடுகளின் நலனுக்கான குரலாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.