மேற்கு வங்க ரயில் விபத்தில் 5 பேர் பலி... உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 13, 2022, 10:09 PM IST
Highlights

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான ஜல்பைகுரி மாவட்டம் மைனகுரி அருகே கவுகாத்தி-பிக்கானர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இன்று மாலை தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. மொத்தம் 12 ரயில் பெட்டிகள் இதில் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக ரயிலில் பயணித்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக பல்வேறு வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மாலை 5 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பணி மூட்டமே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காயமடைந்தவர்களை சக பயணிகளின் உதவியுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மேலும், நிவாரண ரயில் ஒன்றையும் சம்பவ இடத்திற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக இந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், திடீரென ரயில் முதலில் குலுங்கத் தொடங்கியது. அதன் பின்னர் சில பெட்டிகள் கவிழ்ந்தன. உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார். தடம் புரண்ட பெட்டிகளுக்குள் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் கட்டர்கள் கொண்டு பெட்டிகள் வெட்டப்பட்டும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் டிஜி ஆகியோர் டெல்லியில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ₹25,000ம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!