ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இந்த வார எபிசோட்.
இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இந்த வார எபிசோட்.
சபாஷ்
அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் திறமை பலரும் அறிந்ததே. ஆனால், அவர் பிரச்சினையைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் அதனைத் தீர்த்துவிடுவார் என்பது நிறைய பேருக்குத் தெரியாத விஷயமாக இருக்கும்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அம்மாநில பாஜகவின் மூத்த தலைவர்களான கே. எஸ். ஈஸ்வரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா ஆகியோரிடையே பனிப்போர் நிலவிவந்தது.
இரண்டு தலைவர்களும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் தங்களுக்கென செல்வாக்கு கொண்டவர்கள். இவர்களிடையே முரண்பாடு நீடிப்பது நல்லதல்ல என்று கட்சி நினைத்தது. ஒருநாள் அமித் ஷா ஈஸ்வரப்பாவின் இல்லத்திற்குச் சென்றார். அங்கே எடியூரப்பாவும் உடன் இருந்தார்.
மூவரும் ஒரே அறையில் இருக்க, ஷா ஒரு வார்த்தையும் பேசாமல் சிறிது நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த எடியூரப்பாவும் ஈஸ்வரப்பாவும் அவரையே உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் ஷா, "வாங்க போகலாம்" என்று இருவரையும் அழைத்தார்.
இருவருடனும் சென்ற அமித் ஷா காத்திருந்த தொண்டர்களை நோக்கி வெற்றியின் அடையாளம் போல கைகளை உயர்த்தினார். அவ்வளவுதான் மறுநாள் அந்தக் காட்சிதான் தலைப்புச் செய்தியாக மாறியது.
வெறும் 15 நிமிடத்தில் இப்படி பிரச்சினைகளைத் தீர்த்துவைத்துவிட்டார் என்று கட்சி நிர்வாகிகளே அசந்து போய்விட்டார்கள். இன்னும் இதுபோல தீர்க்கப்படவேண்டிய விவகாரங்கள் இருப்பதாவும் கர்நாடக பாஜகவின் கூறுகிறார்கள்.
சீட்டுக்குப் போட்டி
கர்நாடகா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இருக்கும் ஆறு காலி இடங்களில் தங்களுக்கு இடம் கிடைக்குமா என எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தரப்பிலும் அமைச்சரவை நிர்வாகத்தை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது.
2023 மே மாதம் வரவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வாங்கு வங்கியை அதிகரிக்கும் வாய்ப்பு இது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. குருபாஸ், கொல்லார், கங்கமடஸ்தார், வால்மீகி, பஞ்சமசாலி சமூகத்தினரின் ஆதரவைப் பெறலாம் என்பது ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ப்பு.
ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்கள் இடம் பிடிக்கலாம் என்பதால் முன்னாள் முதல்வர் ஒருவர் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல்வர் பொம்மைதான் கட்சிக்குள் தனக்குத்தானே எதிர்ப்பைச் சம்பாதிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்ய வாய்ப்பில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் கர்நாடகப் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றுதான் கவனித்து வருகிறார்கள். இருந்தாலும் இறுதி முடிவு டெல்லியில் இருந்துதான் வரப்போகிறது.
விஜயனின் வானிலை
கேரள முதல்வர் பினாரயி விஜயன் செய்தியாளர்களை சமாளித்து பதில் அளிப்பதில் தேர்ந்தவர். அதற்கு அவருக்கு எப்போதும் வானிலை துணை புரியும்.
பினாராயி டெல்லி சென்றிருந்தார். அப்போது சிபிஎம் கட்சியின் ஈ.பி. ஜெயராஜன் அதே கட்சியைச் சேர்ந்த பி. ஜெயராஜன் மீது கடுமையான மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஆமா, இங்கே ரொம்ப குளிரா தான் இருக்கு" என்று கூலாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார் விஜயன்.
இதேபோல, இடுக்கி எம்.எல்.ஏ. எம்.எம். மணி சிபிஐ தலைவர் அனி ராஜா குறித்து காட்டமாகப் பேசியதைப் பற்றிக் கேட்டபோது, "எதிர்பாராத மழைதான். உங்களுக்கு வேண்டிய அளவு கிடைச்சுதுல்ல?" என்று கூறி நழுவிவிட்டார்.
சில சமயங்களில் ஆவேசம் அடைந்து கடுமையான பதிலைச் சொல்லக் கூடியவர்தான். ஆனால், பெரும்பாலும் சரியான பதில் சொல்ல முடியாதபோது வானிலை நிலவரத்தைச் சொல்லி மழுப்பி விட்டு தப்பி விடுவார்.
காங்கிரஸ் ஒற்றுமை பயணம்
தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது அவரை சிரித்த முகத்துடன் வரவேற்று வாழ்த்தியவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கும் தலைவர்கள்தான்.
தமிழக காங்கிரசின் புதிய தலைமைக்கான தேடல் ஒற்றையடிப் பாதையில் போய் முட்டிக்கொண்டு நின்ற கதையாக முடிந்துவிட்டது. முன்னாள் நிதி அமைச்சர் ஒருவரின் மகன் தலைவர் பதவிக்கு முண்டியடித்ததாக பேச்சு அடிபட்டது. அவருடன் இன்னும் மூன்று பேரின் பெயர்களும் கட்சிக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு எதுவும் எடுபடாமல் தவிர்க்கப்பட்டன.
சமீபத்தில் தொழிலதிபரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒருவரை கட்சியிலிருந்து நீக்கியது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. நீக்கப்பட்டவருக்கு வேண்டியவர்கள் டெல்லியில் இருந்ததால் உடனடியாக சில மணிநேரங்களில் கட்சியிலிருந்து நீக்கும் உத்தரவு ரத்தானது. கூடவே அவரை ஓரங்கட்ட நினைத்தவர்களின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
புதிய தலைமை தொடர்பாக பல கட்டங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தலைவர் பெயரும் கூட பரிசீலிக்கப்பட்டு, கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கடைசியில், பழைய தலைமையுடனே 2024 தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், வேட்பாளர் தேர்வில் அனைவரையும் திருப்திபடுத்தும் பங்கீட்டை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளும் ராகுல், காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தையும் தொடங்க வேண்டியதுதான்.
தெலுங்கானாவில் இறக்குமதி தலைவர்
தெலுங்கானா காங்கிரஸ் கட்சியில் பிரச்சினை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மாநிலத் தலைமைப் பொறுப்பில் ரேவந்த் ரெட்டியை நியமித்ததை எதிர்த்து மூத்த தலைவர்களான ஜெகா ரெட்டி, ஹனுமந்த ராவ் இருவரும் வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.
தெலுங்கானா காங்கிரஸின் முதன்மை எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தவர் ரெட்டி. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவரை தலைவர் பொறுப்பில் நியமித்திருப்பது நீண்ட காலமாக கட்சியில் உள்ள தலைவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
கட்சிக்குள் நடக்கும் இந்தப் பூசலைத் தீர்க்க திக்விஜய் சிங்கை ஹைதராபாத்க்கு அனுப்பியது காங்கிரஸ் தேசியத் தலைமை. அவர் மாநிலத் தலைவர்களுடன் நடந்திய பேச்சுவார்த்தையில், ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவாக உள்ள மாணிக்கம் தாகூரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பதுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.
தெலுங்கானா காங்கிரசின் முன்னாள் தலைவர் உத்தம் ரெட்டி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் மல்லு விக்ரமார்க்கா உள்ளிட்ட வேறு தலைவர்களும் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக திரண்டுள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் ரேவந்த் ரெட்டியின் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைவரையாவது அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.