
கர்பிணிகளுக்கு ரூ. 15 ஆயிரம் நிதியுதவி, ஏழைகளுக்கு 84 லட்சம் ஆடுகள் என பல்வேறு நலத்திட்டங்களை, தெலங்கானா உதயமான 3-ம் ஆண்டு விழாவான நேற்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
ஆண்டுவிழா
ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலத்தில் இருந்து தெலங்கான மாநிலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்தது. மாநிலம் உதயமாகி 3-ம் ஆண்டு விழாவை தொடர்ந்து 3 நாட்களுக்கு கொண்டாட தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுக்கூட்டம்
அதன்படி செகந்திராபாத் நகரில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் முதல்வர்சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார். அதன்பின், அங்குள்ள மைதானத்தில் மக்கள் மத்தியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசினார். அவர் பேசியதாவது-
கே.சி.ஆர் கிட்ஸ்
கர்பிணிகளுக்காகவும், ஆதரவற்ற பெண்களுக்காகவும் 2 திட்டங்களை அறிவிக்கப்போகிறோம். ‘கே.சி.ஆர். கிட்ஸ்’ என்ற பெயரில் கர்பிணிப் பெண்களுக்கும், குழந்தைக்கும் நலம் சேர்க்கும் வகையில் ரூ.15 ஆயிரம் நல உதவி வழங்கப்படும். இந்த திட்டம் நாளை(இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிள்ளைகள், கணவர் ஆதரவில்லாத பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகையாக அளிக்கப்படும். இந்த திட்டம் வரும் 4-ந் தேதியில் இருந்து தொடங்கப்படும்.
84 லட்சம் ஆடுகள்
மாநிலத்தில் உள்ள யாதவர்கள், குருமர்கள் இனத்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்ப நலனுக்காகவும் 75 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில், 84 லட்சம் ஆடுகள் வாங்கப்பட உள்ளன.
ஆடுகள் அதிகமாக வளர்க்கப்படும் போது, மாநிலம் மட்டும் இறைச்சியில் தன்னிறைவு அடையாமல், மற்ற மாநிலங்களுக்கும், வௌி நாடுகளுக்கும்இறைச்சியை ஏற்றுமதி செய்ய வேண்டும். இது மட்டுமல்லாமல் 35 நலத்திட்டங்களுக்காக ரூ. 40 ஆயிரம் கோடியை அரசு செலவிட உள்ளது.
வருவாய் அதிகரிப்பு
தலைமை தணிக்கை கணக்கு அலுவலகம் அளித்த அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக தெலங்கானா மாநிலத்தின் வருவாய் 2016-17ம் நிதியாண்டில், 17.82 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 ஆயிரம் குளங்கள் தூர்வாரல்
விவசாயிகளுக்கு இடைவிடாத மின்சப்ளை அளிக்க அரசு தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பகிரதா திட்டம் மூலம், அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் 16 ஆயிரம் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 5 ஆயிரம் குளங்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அரசு ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குகிறது.
ரூ. 8ஆயிரம் உதவி
அடுத்த ஆண்டு முதல் ஏக்கர் ஒன்றுக்கு இரு பருவ சீசனுக்கு ரூ. 8 ஆயிரம் வீதம் இடுபொருள் செலவாக அளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.