
மஹாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் தேவேந்திரபட்நாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வேளாண் கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதைக் கண்டித்து, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தை இன்று தொடங்கினர்.
மேலும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை இல்லை, மிகவும் குறைந்த அளவில் விலை கிடைப்பதையும் கண்டித்து, வெங்காயம், காய்கறிகள், பழங்களையும் சாலையில் வீசி எறிந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருந்தபோதிலும், மாநிலத்தின் சில பகுதிகளில் இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், சமீபம காலமாக விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடனில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்த பா.ஜனதா அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்துவிட்டதை சுட்டிக்காட்டியும், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கவும் வங்கியில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு கடன் தள்ளுபடி செய்வது குறித்து உறுதியான முடிவை இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த சில நாட்களாக ‘கிஷான் கிராந்தி மோர்ச்சா’ எனப்படும் விவசாயிகள் சங்கம் முதல்வர் பட்நாவிஸுடன்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், அது தோல்வியில் முடிந்தது, போராட்டத்தை ஒத்திவைக்க கோரிய முதல்வரின் கோரிக்கையையும் விவசாயிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து இன்று காலை முதல் மும்பைக்குஎந்த விதமான பொருட்களையும் அனுப்பாமல் 700 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால் மும்பைக்கு பால், பழங்கள், காய்கறிகள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்படும் எனத் தெரிகிறது.
மேலும், புனே, தாவந்த், கோரிகான் ஆகிய நகரங்களில் விவசாயிகள் காய்கறிகளையும், பழங்களையும் சாலையில் வீசி எறிந்துபோராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.மும்பைக்கு எந்த விதமான காய்கறியும், பாலும், பழங்கும் செல்லாதவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.