
மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க தென் ஆப்ரிக்கா பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் XE வேரியண்ட் தொற்று ஏற்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி வந்தன. புதிய கொரோனா வைரஸ் XE வேரியண்ட் இந்தியாவில் நான்காவது அலையை ஏற்படுத்தும் என்ற வகையில் கூறப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் XE வேரியண்ட்:
எனினும், இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் ஊடகத்தில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்தது. "தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் புது வேரியண்ட் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தவில்லை," என தெரிவித்ததாக மகாராஷ்டிரா பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட் செய்து இருக்கிறது.
தென் ஆப்ரிக்கா பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் மத்திய அரசு நிறுவனமான INSACOG ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்த வேரியண்ட் தன்மைகள் எதுவும் XE வேரியண்ட் உடன் ஒற்றுப் போகவில்லை என தெரியவந்துள்ளது.
புது வேரியண்ட்:
கொரோனா வைரஸ் XE வேரியண்ட் என்பது BA. 1 மற்றும் BA. 2 வகைகளின் மறு உருவாக்கம் அடைந்த வேரியண்ட் ஆகும். இத்துடன் ஒமிக்ரான் BA. 1 அல்லது BA. 2 வகைகளில் இல்லாத மூன்று வகைகளை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தான் புது வேரியண்ட் XE என அழைக்கப்படுகிறது.
பரவல்:
தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் XE வேரியண்ட் அதிவேகமாக பரவும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பிரிட்டனில் சேகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில், புது XE வேரியண்ட் பத்து சதவீதம் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பற்றிய ஆய்வுகள் மிகத் தீவரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் XE வேரியண்ட் அறிகுறிகள்:
புதிய வகை கொரோனா வைரஸ் XE வேரியண்ட் அறிகுறிகள் மிகத் தீவிரமாக இருக்குமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலும் இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகத் தீவிரமாக எதிர்த்து, அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இரு தன்மைகள் பற்றியும் இதுவரை எவ்வித தரவுகளும் கிடைக்கவில்லை. தற்போது ஒமிக்ரான் வேரியண்டின் திரிபு வேரியண்ட் ஆக XE வேரியண்ட் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பற்றிய விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, சரும எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் செரிமான கோளாறு உள்ளிட்டவை ஒமிக்ரான் வேரியண்ட் அறிகுறிகளாக இருக்கின்றன.
பிரிட்டனில் கண்டுபிடிப்பு:
புதிய வகை கொரோனா வைரஸ் XE வேரியண்ட் பிரிட்டனில் ஜனவரி 19 ஆம் தேதி கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்டது முதல் இதுவரை சுமார் 600-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் XE வேரியண்ட் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் XE பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.