ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார்

Published : Aug 04, 2025, 10:07 AM ISTUpdated : Aug 04, 2025, 10:16 AM IST
shibu soren former jharkhand cm

சுருக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் மற்றும் மூன்று முறை முதல்வராக பதவி வகித்தவர். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

Shibu Soren passes away : சிபு சோரன் ஜனவரி 11, 1944 இல் இப்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் என்ற இடத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனராகவும், முக்கிய தலைவராகவும் சிபு சோரன் இருந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை (2005, 2008-09, 2009-10) பதவி வகித்துள்ளார். 

சிபு சோரன் அரசியல் பயணம்

சிபு சோரன் 1970களில் பழங்குடியின மக்களின் நில உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினார். 1972இல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை (JMM)  என்ற கட்சியை தோழர்களுடன் இணைந்து தொடங்கினார். இந்தக் கட்சியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், மாநில உருவாக்கத்திற்காகவும் போராடியதில் முக்கிய பங்கு வகித்தது. பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவர் 2005 ஆண்டு மார்ச் மாதம் 10 நாட்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார், ஏனெனில் அவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து 2008-09 ஆம் ஆண்டில் மீண்டும் முதலமைச்சராகப் பதவி வகித்தார், ஆனால் 2009 இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அடுத்ததாக 2009-10ஆம் ஆண்டில்  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பாஜகவுடன் கூட்டணி அரசு அமைத்து மீண்டும் முதலமைச்சரானார், ஆனால் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் 6  மாதங்களில் பதவி இழந்தார். இது போன்று பல்வேறு முறை முதலமைச்சர் பதவியை இழந்தவர் 2004, 2004-05, மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் நிலக்கரி அமைச்சராகப் பணியாற்றினார்.

கொலை வழக்கில் கைது- விடுதலை

ஆனாலும் அதிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. 1994இல் அவரது தனிச் செயலாளர் ஷஷி நாத் ஜாவின் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் சிபு சோரனுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2006இல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில்  டெல்லி உயர் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு சிபு சோரனை இந்த வழக்கில் விடுதலை செய்தது. 2020இல் சிபு சோரன் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சிபு சோரன் காலமானார்

அவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிபு சோரனின் உடல்நிலை மோசமடைந்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!