ராஜ்யசபா தேர்தலுக்கு சோனியா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் அவரது சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், சோனியா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் அவரது சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.
அதன்படி, சோனியா காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.53 கோடி. கடந்த மக்களவை தேர்தலை ஒப்பிடுகையில், இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் அதிகரித்துள்ளது. அவருக்கு சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.
சோனியா காந்திக்கு இத்தாலியிலும் சொத்து உள்ளது. அங்குள்ள மூதாதையர் சொத்தில் அவருக்கு பங்கு உள்ளது. இத்தாலியில் உள்ள தனது தந்தையின் சொத்து மதிப்பு 26 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதாக சோனியா காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் 88 கிலோ வெள்ளி மற்றும் 1267 கிராம் தங்கம் மற்றும் நகைகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லியில் உள்ள தேரா மண்டி கிராமத்தில் சோனியாவுக்கு 2529.28 சதுர மீட்டர் விவசாய நிலம் உள்ளது. அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ. 5.88 கோடி. அந்த நிலத்தின் தற்போதைய சந்தை விலை, சதுர மீட்டருக்கு ரூ.23,280 என கூறப்படுகிறது.
எம்.பி. சம்பளம், ராயல்டி வருமானம், வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி, மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, மூலதன ஆதாயங்கள் போன்றவற்றை தனது வருமான ஆதாரங்களாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். பென்குயின் புக் இந்தியா, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், ஆனந்தா பப்ளிஷர்ஸ், கான்டினென்டல் பப்ளிஷேஷன்ஸ் ஆகியவற்றுடன் சோனியா காந்தி ஒப்பந்தம் செய்துள்ளார். இவை வெளியிட்ட தனது புத்தகங்களிலிருந்து சோனியா காந்தி ராயல்டி பெறுகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தில் இருந்து ரூ.1.69 லட்சம் ராயல்டி பெறப்பட்டதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மாற்றம்!
அதேபோல், தன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு பங்குதாரர்கள் மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 420, 120பி, 403, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சோனியா காந்தி மீது வழக்கு நிலுவையில் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.