காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை காங்கிரஸின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. மேலும் 2018-19 நிதியாண்டு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி ரூ. 210 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது. நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருமான வரித்துறை, “இளைஞர் காங்கிரஸின் கணக்குகள் உட்பட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது' என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பாஜகவுக்கு எதிரானதாக பார்க்கப்படும் நிலையில், பிற கட்சிகளின் நிதி சேகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா விளக்கம்!
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் கூறுகையில், “நாங்கள் வழங்கும் காசோலை மீது வங்கிகள் செயலாற்றவில்லை என்ற தகவல் நேற்று எங்களுக்கு கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தெரிய வந்தது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.” என்றார்.
மேலும், “இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து ரூ.210 கோடி அபராதமாக வருமான வரித்துறை கேட்டுள்ளது. கட்சியின் கணக்குகளில் இருந்த கிரவுட் ஃபண்டிங் பணமும் முடக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கணக்கு முடக்கப்படுவது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்.” என்றும் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.