'நிபா வைரசால்' இறந்த நர்சின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்

First Published May 23, 2018, 6:41 PM IST
Highlights
Foreign Companies Accepting Nurse Lini Childrens Education Cost


நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, அந்த நோய் தாக்கி உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியர் லினியின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலம், கோழிகோட்டில் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கவனித்துக் கொண்ட செவிலியரான லினியும் ஒருவர். லினி ஒரு தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். தனது பணியில் இருந்தபோது லினிக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

28 வயதான செவிலியர் லினிக்கு 2 வயதிலும் 7 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் பஹ்ரைனில் வசித்து வருகிறார். லினி இறப்பதற்கு முன்னர் தனது கணவருக்கு எழுதிய கடிதத்தில், இனி என்னால் உங்களை சந்திக்க முடியும் என தோன்றவில்லை. நமது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும், உங்களுடன் வெளிநாட்டிற்கே அழைத்து செல்லுங்கள். தனியாக விட்டுவிடாதீர்கள் என்று உருக்கமாக எழுதியிருந்தார். இந்த கடிதம சமூக ஊடகங்களிலும், கேரள மாநிலத்திலும் பெரும் அதிர்வலையை எழுப்பியது.

லினியின் இறப்புக்கு, 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், அரசு பணி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அபுதாபியில் உள்ள இரண்டு நிறுவனங்கள் லினியின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. பாலக்காட்டில் உள்ள அவிதிஸ் மெடிக்கல் சயின்ஸ் அமைப்பின் இயக்குநர்கள் சாந்தி பிரோமத், ஜோதி பாலட். இவர்கள் தற்போது அபுதாபியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் லினியின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

செவிலியர் லினி, போற்றத்தகுந்த நர்ஸ் சேவையில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது உயிரை இழந்துள்ளார். அவரின் கடமை உணர்வுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவி, அவரின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதுதான் என்று கூறியுள்ளா. இது குறித்து அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார். குழந்தைகளின் கல்வி செலவை நிறுவனம் ஏற்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று லினியின் சகோதரர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

click me!