
கேரள மாநிலத்தில் கோழிகோட்டில் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கவனித்துக் கொண்ட செவிலியரான லினியும் ஒருவர்.
லினி ஒரு தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். தனது பணியில் இருந்த போது லினிக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன் லினி தனது கணவருக்கு எழுதிய கடிதம் ஒன்றை, கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் ”சகோதரி இந்த குறிப்பு ஒரு போதும் மனதிலிருந்து அகலாது. இந்த கேரளம் உன் வீரத்தை ஒரு நாளும் மறவாது” எனவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த கடிதத்தில் லினி வெளிநாட்டிலிருக்கும் தன் கணவரிடம், ”இனி என்னால் உங்களை சந்திக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. நமது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் உங்களுடன் வெளிநாட்டிற்கே அழைத்து செல்லுங்கள். தனியாக விட்டுவிடாதீர்கள்“ என கூறியிருக்கிறார்.
இறக்கும் தருவாயில் கூட தாய் பாசத்துடன், தன் குழந்தைகளை நினைத்து வருந்தி, அவர் வைத்திருக்கும் இந்த கோரிக்கை, இக்கடிதத்தை படிப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.