
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான ஈக்குவடோரியல் கினியா மற்றும் நைஜீரியா நாட்டில் சிறை பிடிக்கப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த மூன்று மாலுமிகள், சிறையில் இருந்த நாட்களில் கழிவறை தண்ணீரைக் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
MT Heroic Idun என்ற சரக்குக் கப்பல் நைஜீரிய நாட்டு கடல் எல்லைக்குள் புகுந்ததாக அந்நாட்டு அரசால் கடந்த ஆண்டு சிறை பிடிக்கப்பட்டது. அந்த கப்பலில், சானு ஜோசப், வி. விஜித் மற்றும் மில்டன் டி' கவுத் ஆகிய கேரளாவை சேர்ந்த மூவர் உட்பட இந்தியர்கள் 16 பேர் இருந்தனர். அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்திய அரசின் நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கடந்த 10ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
கேரள விமான நிலையம் வந்த சானு ஜோசப், வி. விஜித் மற்றும் மில்டன் டி' கவுத் ஆகியோரை அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் கழிவறை தண்ணீரைக் குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினர்.
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 16 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 8 பேர், போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 26 பணியாளர்கள் இருந்தனர். எண்ணெய் திருட்டு உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், ஈக்குவடோரியல் கினியாவிலும், பின்னர் நைஜீரியாவிலும் சிறை வைக்கப்பட்டனர். இந்த கப்பல் ஈக்குவடோரியல் கினியாவின் கடல் பகுதியை கடந்து சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு முழு ஆதரவு வழங்கும் வடகொரிய அதிபர்!
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவர்களை மீட்கும் பணியை இந்திய அரசு மேற்கொண்டது. தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கப்பலில் இருந்த இந்தியர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு பதிலாக, வழக்கமான உணவுகளுடன் கப்பலில் தங்குவதற்கு கப்பலில் இருந்த குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறைப்பிடிக்கப்பட்ட போது தாங்கள் மிகவும் அவதிப்பட்டதாகவும், நோய்வாய்ப்பட்டதாகவும், மலேரியா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கப்பலில் இருந்த மாலுமிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாலுமிகளில் ஒருவர் கூறுகையில், ஒருகட்டத்தில் தாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.