முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடும் ஜம்மு-காஷ்மீர்!

By Manikanda PrabuFirst Published Aug 15, 2023, 12:10 PM IST
Highlights

ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதன் முதலாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள்

நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10ஆவது முறையாக தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்தந்த மாநிலங்களில் மாநில  முதல்வர்கள் கொடியேற்றி மரியாதை செய்தனர்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதன் முதலாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். 1989ஆம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால், நடப்பாண்டில், பாதுகாப்பு கட்டுப்பாடுகளோ, ஊரடங்கு உத்தரவோ, தகவல் தொடர்பு தடைகளோ, வேலைநிறுத்தப் போராட்டங்களோ இன்றி நிதானமான சூழலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழாவில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் ஜம்மு-காஷ்மீரின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. புதுப்பிப்பு, மேம்பாட்டு பணிகளுக்காக இந்த மைதானம் கடந்த 2018ஆம் ஆண்டில் மூடப்பட்ட நிலையில், ஐந்தாண்டுகளுக்க்கு பிறகு பக்ஷி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதனால், அம்மைதானத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுதவிர, எல்லைக் கட்டுப்பாடு கோடு உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாடு கோட்டிலும் ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“1989இல் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு முதன்முறையாக பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்படும். மக்கள் நடமாட்டத்துக்கு தடை இருக்காது” காஷ்மீர் பிரிவு ஆணையர் வி.கே.பிதுரி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று, தகவல் தொடர்புத் தடையும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது: பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சு!

கடந்த காலங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பகுதிகளில், சுதந்திர தின விழாக்கள் முடியும் வரை, ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக மதியம் வரை மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்படும். பிரிவினைவாத ஹுரியத் அமைப்பு, ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும். ஆனால், அதன் உயர்மட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த அமைப்பு பலவீனமடைந்துள்ளது. இதனால், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கும் இந்த முறை அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக பக்‌ஷி மைதானத்தில் சுதந்திர தின கொண்டாடங்கள் நடைபெறுகிறது. பொதுவாக சுதந்திர தின நிகழ்ச்சிகள் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் தலைமையில் நடைபெறும். ஆனால், அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக அதிகாரியாக செயல்படும் துணை நிலை ஆளுநர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

click me!