
சீரற்ற பருவமழை காரணமாக வரும் மாதங்களில் நாட்டில் பணவீக்க நிலைமை மோசமடையக்கூடும் என்று பாங்க் ஆஃப் பரோடா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டிற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு நீண்ட கால சராசரியை விட 11 சதவீதம் குறைந்து பற்றாக்குறையாகியுள்ளது.” என அந்த அறிக்கை கூறுகிறது. கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் வெப்பமயமாதலுடன் தொடர்புடைய எல் நினோ நிகழ்வால் ஆகஸ்ட் மாதத்தில் சீரற்ற மழை பொழிந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
“கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஒழுங்கின்மை மூலம் பசிபிக் வெப்பமயமாதல் காரணமாக இந்த நிலைமைகள் மிதமான நிலையிலிருந்து வலுவாக மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததாலும், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததாலும் காரீஃப் விதைப்பு கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது. இதையொட்டி வரும் மாதங்களில் பணவீக்கம் உயரும்.” என பாங்க் ஆப் பரோடா பொருளாதார நிபுணர் ஜான்வி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி சவுதி அரேபியா: பிரதமர் மோடி!
நடப்பாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி வரையிலான கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது மொத்த காரீஃப் விதைப்பு 0.4 சதவீதம் (1,073.2 லட்சம் ஹெக்டேர் முதல் 1,077.8 லட்சம் ஹெக்டேர்) மட்டுமே மேம்பட்டுள்ளது என்று ஜான்வி பிரபாகர் சுட்டிக்காட்டினார். ஆனால் நேர்மறையாக, கடந்த ஆண்டை விட நெல் சாகுபடி 3.7% அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், பருப்பு வகைகள் எதிர்மறையான விதைப்பை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாய உற்பத்தியிலும் அதனாலான பொருளாதார வளர்ச்சியிலும் பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை மிகவும் சாதகமற்றதாக இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பீகார், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பகுதிகளில் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் குறைவான மழை மட்டுமே பெய்துள்ளது. மேலும், கேரளா, மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களும் குறைந்த மழைப்பொழிவையே கண்டுள்ளன.
இருப்பினும் இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அம்மாநிலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. ஆனால், நடப்பாண்டில் மழையளவு கடந்த ஆண்டை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது (31mm vs 36mm). இது வழக்கமான மழையை விட (50.9 மிமீ) மிகக் குறைவாக உள்ளது. கடந்த பருவத்தில் 82% ஆக இருந்த நீர்த்தேக்க அளவு 2023 ஆகஸ்ட் 31 அன்று 63% ஆக உள்ளது. சீரற்ற மழை, உற்பத்தி பாதிப்பு, பணவீக்கம் உயருவது போன்றவற்றால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.