
உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கியவர்களும் வயிறு நிறைய சாப்பிட 5 ரூபாய்க்கு விருந்து சாப்பாடு வழங்க முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்குபின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராப் பொறுப்பு ஏற்றுள்ளார். இவரின் பல நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சட்டவிரோத இறைச்சிகடைகளுக்கு தடை, ஆன்ட்டி ரோமியா படை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் குறைந்த செலவில் சாப்பிட வேண்டும் என்பதற்காக அரசு செலவில் உணவகம் அமைக்க முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டு இருந்தார்.
முதல்கட்டமாக ரூ. 15 என்றும், ரூ.10 என்று உணவுகளின் விலை ஆலோசிக்கப்பட்ட நிலையில், ரூ. 5க்கு விருந்து சாப்பாடு வழங்க ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உணவில், சாதம், பருப்பு, சப்பாத்தி, ஒரு காய், அப்பளம், ஒரு குழம்பு போன்றவை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி கூறுகையில், “ முதல்வர் ஆதித்யநாத் ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல சாப்பாடு வழங்க உத்தரவிட்டு இருந்தார். இதற்காக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்து, அங்கு அரசு செலவில் வழங்கப்படும் சாப்பாட்டின் விலை, தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தோம்.
இதையடுத்து, ரூ. 5 விலையில் ஏழைகளுக்காக விருந்து சாப்பாடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவு மிகவும் சுத்தமாக, தரமாக, ருசியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அரசு உணவுகம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன’’ எனத் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அதைப் பின்பற்றியே இப்போது மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அரசு உணவகங்களை தொடங்கின. அதன் தொடர்ச்சியாக இப்போது உத்தரப்பிரதேச மாநிலமும் இணைந்துவிட்டது.