2 ஆயிரம் தலித்துகள் ‘முஸ்லிம் மதத்துக்கு’ மாற முடிவு - பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் பதற்றம்...

First Published May 22, 2017, 9:32 PM IST
Highlights
dalits to be convert as muslims in up hindu goddess


உத்தரப்பிரதேசம் அலிகாரில் உயர் சாதி இந்துக்களின் கொடுமை, அடக்குமுறை என குற்றம்சாட்டி 2 ஆயிரம் தலித் மக்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளனர்.

இதன் அடையாளமாக இந்துக் கடவுளின் படங்களை நீரில் மூழ்கச் செய்து, தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குபின் பா.ஜனதா கட்சி வெற்று பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் தொகுதி எம்.பி. யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். 

மிகவும் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சாதிக்கொடுமை இன்னும் பல மாவட்டங்களில் தலைவரித்தாடுகிறது. கடந்த சில வாரங்களாக மொராதாபாத், சம்பல் பகுதியில் தலித்துக்கள் மீது உயர் சாதியினர்அடக்குமுறையை கையாண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அலிகாரில் உயர் சாதியான தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தலித் மக்களுக்கும் இடையே கோயில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. தலித்துக்கள் கட்டும் பைரவ் பாபா கோயிலுக்கு தாக்கூர் இன தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே பெரிய பிரச்சினையும், மோதலும் ஏற்பட்டது. இதையடுத்து, இப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் தலித் மக்கள் முஸ்லிம் மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து கேஷ்கோபூர் ஜோப்ரி கிராமத்தைச் சேர்ந்த தலித் தலைவர் பன்ட்டி சிங் கூறுகையில், “ நாங்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளோம். உயர்சாதியினர் தொடர்ந்து எங்களிடம் வேறுபாடு காட்டி நடத்தி, கொடுமைப்படுத்துகிறார்கள்.

தேர்தல்நேரத்தில் எங்களையும் உயர்சாதியினருக்கு சமமாக நடத்தினார்கள். தேர்தல் முடிந்தவுடன், மீண்டும் எங்களை மோசமாக நடத்த உயர்சாதியினர் தொடங்கிவிட்டார்கள். இந்து மதத்தில் நாங்களும் ஒரு பிரிவினர் என்பதை உயர்சாதியினர் கருத மறுக்கிறார்கள்.

பா.ஜனதா கட்சி எப்போது ஆட்சிக்கு வந்தாலும், உயர்சாதியினர் எங்களை அடக்குமுறையை ஏவி நசுக்குகிறார்கள். தலித்துக்களுக்கு எதிரான போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்து வலதுசாரி அமைப்புகள் எங்களை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்’’ எனத் தெரிவித்தார். 

ஆனால், இந்த குற்றச்சாட்டை தாக்கூர் இனத் தலைவர்கள் மறுக்கிறார்கள். தாக்கூர் சாதியைச் சேர்ந்த தேவேந்திர சவுகான் கூறுகையில், “ நாங்கள் தலித்துக்களுக்கு எதிராக தவறாக ஒன்றும் செய்யவில்லை.

சில தலித்தலைவர்கள் தங்களின் சொந்த காரணங்களுக்காக எங்களிடம்பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள். பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதையடுத்து போலீஸ் எஸ்.பி. ராஜேஸ் பாண்டே தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!