தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசிவந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் மாற்றம்...!

First Published May 22, 2017, 8:39 PM IST
Highlights
tamilnadu fishermans against srilankan minister samaraveera was transfered


தமிழக மீனவர்களுக்கு எதிரான ராணுவ தாக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் சமர வீரா, திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீரா, நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நிதி துறையை கவனித்து வந்த ரவி கருணாநாயகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போருக்கு பின் சர்வதேச அளவில் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தி, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியதில் மங்கள் சமரவீரா முக்கியமானவர்.  

60 வயதான சமரவீரா மீது சமீப வாரங்களாகவே எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையில், நாட்டின் நலனுக்கு எதிரான முடிவுகளை சமரவீரா எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தி வந்த சமரவீரா, பிடிக்கப்பட்ட தமிழக மீனவர் படகுகளை திரும்பத் தர முடியாது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சமரவீரா வெளியுறவுத்துறை பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சராக இருந்த ரவி கருணா நாயகே மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. வரிச் சீர்திருத்தத்தில் போதுமான முன் முடிவுகளை யோசிக்காமல் திட்டங்களை தீட்டியதாக ஆளும் தரப்பிலேயே கருணா நாயகே மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. இந்நிலையில் ரவி கருணா நாயகே புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகம் மற்றும் கப்பல் துறை கவனித்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூனா ரணதுங்கேவையும் அந்த துறையிலிருந்து மாற்றி பெட்ரோலிய துறை அமைச்சராக நியமித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

click me!