
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் பேய் மழை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மைஆணையம் தெரிவித்துள்ளது
18 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால், ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ருப், கோக்ரஜ்ஹர், சோனிட்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் புள்ளிவிவரங்கள்படி, 96 வருவாய் மாவட்டங்களி்ல் உள்ள 2930 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 28 மாவட்டங்களில் உள்ள 18.94 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பெருக்கு
அசாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 43ஆயிரத்து 338 ஹெக்டேர் வேளாண் நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அசாமில் ஓடும் பெகி, மனாஸ், பக்லாடியா, புதிமாரி, ஜியா பராலி,கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆபத்தான கட்டத்தை கடந்து பாய்ந்து வருகிறது.
இது தவிர திமா ஹசாவோ, கோல்பாரா, ஹோஜாய், கம்ருப், கம்ரூப் நகர்பகுதி, மோரிகான் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், நிலச்சரிவு ஏற்படக்கூடிய வசித்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருலட்சத்து 8ஆயிரத்து 104 பேர் 373 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் ஒரு லட்சம ்பேர்
பஜாலிமாவட்டத்தில் மட்டும் 3.50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தர்ராங் மாவட்டத்தில் 2.90 லட்சம் பேர், கோல்பாராவில் 1.84 லட்சம் பேர், பார்பேட்டா மாவட்டத்தில் 1.69 லட்சம் பேர், நல்பாரியில் 1.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்ரூப்பில் 1.19 லட்சம் பேர், ஹோஜாயில் 1.05 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இந்திய ராணுவத்தின் கஜ்ராஜ் படைப்பிரிவு தேவையான மீட்புப்பணிகளில் இறங்கியுள்ளனர். அசாம் போலீஸார், மீட்புப்படையினர், தீத்தடுப்பு படையினர், மாநில பேரிடர் மேலாண்மை படையினருடன் சேர்ந்து ராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
குறிப்பாக பக்ஸா, நல்பாரி, பஜாலி, தர்ராங், தமுல்புர்,ஹோஜாய், கம்ரூப் ஆகிய மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து மாநில முதல்வர் ஹிமாந்தா பாசுவிடம் தொலைப்பேசியில் இன்றுகாலை பேசி, நிலவரங்களை பிரதமர்மோடி கேட்டறிந்தார். அசாம் மாநிலத்துக்கு மத்திய அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர்மோடி உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இன்று காலை 6மணிக்கு, பிரதமர் மோடி என்னை தொலைப்பேசியில் அழைத்து அசாம் வெள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார். இயற்கை சீற்றத்தால் மக்கள் படும் வேதனைகள், துயரங்களை கண்டு பிரதமர் மோடி கவலைஅடைந்தார். அசாம் மாநிலத்துக்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என உறுதியளித்தார். பணிவுடன் அவரின் இரக்கத்தையும், அன்பையும்வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.