18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து 71 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள். 36 பேர் இணையமைச்சர்கள். 5 பேர் சுயாதீன பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவராக பொறுப்பேற்று வருகின்றனர்.
ஜி7 உச்சி மாநாடு என்றால் என்ன? பிரதமர் மோடி இத்தாலி பயணம்!
அதேசமயம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் தேர்தல் நடைமுறைகள் முழுவதுமாக முற்றுப்பெறும். முன்னதாக, பிரதமர் மோடி பரிந்துரையை ஏற்று 17ஆவது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள 18ஆவது மக்களவையின் முதல் கூட்ட எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம், மக்களவைத் தலைவர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் அது குறித்த விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில், “மாநிலங்களவையின் 264ஆவது கூட்டத்தொடர் 2024, ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி நிறைவடையும்.” என பதிவிட்டுள்ளார்.