இந்திய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தகவலை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நாட்டின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவை இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான உத்தேச தேதியை அறிவித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை அரம்பித்து விட்டன. கூட்டணி, தொகுதி பங்கீடு என ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க, ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். எதிர்வரவுள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளன.
Breaking சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம், பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக, பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசு குறிப்பிட்ட விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் வெளிப்படையான அறிக்கையாகத் தாக்கல் செய்வதாகும். ‘வெளிப்படையான’ விளக்கம் தரும் அறிக்கை என்பதால் இது வெள்ளை அறிக்கை எனப்படுகிறது. முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாகவும் இது விளங்குகிறது. ஏனெனில், பெரும்பாலும் அரசு வைத்திருக்கும் தரவுகள்தான் புள்ளி விவரங்களாக வெள்ளை அறிக்கையில் இடம் பெறுகின்றன.
மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறது: டெல்லி போராட்டத்தில் கேரள முதல்வர் விமர்சனம்
பிரிட்டிஷ் பாராளுமன்ற முறைப்படி முக்கியமான பிரச்னைகளுக்கு வெள்ளை அறிக்கை தயார் செய்வது வழக்கம். வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வது சுழற்சி முறையில் நடைபெறக்கூடிய சாதாரண நிகழ்வுதான். வெள்ளை அறிக்கை அரசாங்கம் மட்டும் இன்றி எந்த அமைப்பு வேண்டுமானாலும் தயார் செய்யக்கூடிதுதான் என்கிறார்கள். நடந்து முடிந்த சம்பவங்களை, தற்போதைய சூழ்நிலையைச் சொல்லுவதோடு அதற்கான தீர்வுகளை, வருங்கால நடவடிக்கைகள், திட்டங்களையும் வெளிப்படுத்துவதுதான் வெள்ளை அறிக்கையின் நோக்கமாகும்.